குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த குழந்தை
ஆண்டிப்பட்டி அருகே குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் குழந்தை தவறி விழுந்தது. உடனே அப்பகுதி மக்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பள்ளத்தில் விழுந்த குழந்தை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஆத்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி செல்லக்கிளி. இவர்களுக்கு 1¼ வயதில் பிரவீன்குமார் என்ற ஆண் குழந்தை உள்ளது.மதுரைக்கு குடிநீர் எடுத்து செல்ல கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிப்பதற்காகஅருண்குமார் வீட்டின் முன்பாக சுமார் 5 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அங்கு குழாய் பதிக்கவில்லை.
கடந்த சில நாட்களாக ஆத்துக்காடு பகுதியில் மழை பெய்து வருவதால் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டு முன்பு குழந்தை பிரவீன்குமார் தனியாக விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பள்ளத்தில் குழந்தை தவறி விழுந்தது. அதில் தேங்கி நின்ற மழைநீரில் குழந்தை மூழ்கியது.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
சிறிது நேரத்தில் அருண்குமார் வீட்டை விட்டு வெளியே வந்து குழந்தையை தேடினார். அப்போது வீட்டுக்கு முன்பு இருந்த பள்ளத்தில் தேங்கி நின்ற தண்ணீரில் பேச்சு, மூச்சு இல்லாமல் குழந்தை மிதப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தை பிரவீன்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையின்போது, குழந்தையின் வயிற்றில் இருந்த தண்ணீரை அகற்றியதால் அபாய கட்டத்தை கடந்தது. மேலும் தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.