வேப்பூர் அருகே முட்புதருக்குள் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை போலீஸ் விசாரணை
வேப்பூர் அருகே முட்புதருக்குள் பச்சிளம் குழந்தை வீசப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமநத்தம்,
வேப்பூர் அருகே உள்ளது புல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் வயல்வெளிக்கு செல்லும் சாலையோரம் உள்ள முட்புதரில் இருந்து நேற்று அதிகாலையில் குழந்தை அழும் சத்தம் கேட்டது.
இதை கேட்ட அந்த பகுதியினர், புதருக்கு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பாலித்தின் பையில், பெண் குழந்தை வைக்கப்பட்டு இருந்தது. மேலும், தொப்புள் கொடி அகற்றப்படாமல் இருந்தது. இதன் மூலம் அந்த குழந்தை பிறந்து சில மணி நேரங்களே ஆகி இருக்கும் என்றும் தெரியவந்தது.
சிகிச்சை
அதோடு, அந்த பகுதியில் மழையும் பெய்து கொண்டு இருந்ததால் குழந்தையின் நெற்றி பகுதி உள்ளிட்ட இடங்களில் சேறு இருந்தது. மழையால் குழந்தை குளிரில் நடுங்கி கொண்டு இருந்தது. இது அங்கிருந்த மக்களை கண்கலங்க வைத்தது. இதற்கிடையே சம்பவ இடத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அதில் அந்த குழந்தையை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கிராம மக்கள் அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
போலீஸ் விசாரணை
இது தொடர்பாக வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா, குழந்தை யாருடையது? அதை அங்கு வீசி சென்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.