சீனாவில் தயாரிக்கப்பட்ட ரப்பர் படகு கரை ஒதுங்கியது
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே சீனாவில் தயாரிக்கப்பட்ட ரப்பர் படகு கரை ஒதுங்கி கிடந்தது. இந்த படகில் வந்த போலந்து நாட்டை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே சீனாவில் தயாரிக்கப்பட்ட ரப்பர் படகு கரை ஒதுங்கி கிடந்தது. இந்த படகில் வந்த போலந்து நாட்டை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கரை ஒதுங்கிய சீன படகு
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு கிராமம் முணாங்காடு பகுதியில் நேற்று காலை சீனாவில் தயாரிக்கப்பட்ட ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை சரக டி.ஐ.ஜி.கயல்விழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர்(நாகை), சுரேஷ்குமார்(திருவாரூர்), வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல்,கடலோர காவல் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராசு, வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, தாசில்தார் ரவிச்சந்திரன், மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் , கடற்படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து கரை ஒதுங்கி கிடந்த ரப்பர் படகை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
2 பேர் மட்டும் பயணம் செய்ய கூடியது
கரை ஒதுங்கிய ரப்பர் படகில் இருவர் மட்டுமே பயணம் செய்யும் அளவில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படகு 13 மீட்டர் நீளத்திலும், 3 அடி அகலத்திலும் இருந்தது. படகு துடுப்பை பயன்படுத்தி செலுத்த கூடியதுபடகில் இலங்கையில் பயன்படுத்தபடும் 1½ லிட்டர் அளவு கொண்ட 16 தண்ணீர் பாட்டில்களும், 4 பாதுகாப்பு உடைகளும், நீந்துவதற்கு பயன்படுத்தும் ஒரு ஜோடி காலணி மற்றும் கண்ணாடி, கருப்பு நிற பை உள்ளிட்டவைகள் இருந்தன.
உளவாளிகள் ஊடுருவலா?
இதைத்தொடர்ந்து நாகையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் துளி அங்கு வரவழைக்கப்பட்டது. அது படகு கரை ஒதுங்கி கிடந்த இடத்தில் இருந்து காட்டுப்பகுதிக்குள் ஓடி நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் காட்டுப்பகுதியில் டிரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தனர். இதையடுத்து அந்த படகை வேதாரண்யம் கடலோர காவல் குழு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் இலங்கையில் இருந்து யாராவது இந்த படகில் வந்தார்களா? அல்லது சீனாவை சேர்ந்த உளவாளிகள் வந்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
சந்தேகப்படும் வகையில் சுற்றித்திந்த நபர்
இதற்கிடையே வெளிநபர்கள் சுற்றித்திரிந்தால் மீனவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் வேதாரண்யத்தை அடுத்த ஆறுக்காட்டுத்துறையில் சந்தேகப்படும் வகையில் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார்.
அவரை அந்த பகுதி வாலிபர்கள் பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த நபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
போலந்து நாட்டுக்காரர் கைது
அப்போது அங்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், அந்த நபரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் போலந்து நாட்டை சேர்ந்த வாத்தீஸ் வாப்(வயது40) என்பதும், கரை ஒதுங்கிய ரப்பர் படகில் இவர் தான் வந்ததும் தெரிய வந்ததது.
அவரிடம் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் இல்லாததால் வாத்தீஸ் வாப்பை கைது செய்தனர். மேலும் இவருடன் யாராவது வந்தார்கள் என்றும், எதற்காக வந்தார்கள் என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். வாத்தீஸ் வாப் கழுத்தில் 4293 என்று பச்சை குத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.