பட்டாசு வெடித்து புகை மண்டலமாகிய மாநகரம்
நெல்லையில் தீபாவளி கொண்டாட்டம்: பட்டாசு வெடித்து புகை மண்டலமாகிய மாநகரத்தை குப்பைகளை அகற்றும் பணியை மேயர் ஆய்வு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாநகர் முழுவதும் பொது மக்கள் பட்டாசுகள், காய்கறிகள், புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காக கடை வீதிகளில் குவிந்தனர். நேற்று முன்தினம் தீபாவளி பொது மக்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலையில் உடலில் எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து வழிபாடு நடத்தினர். கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.
அதை தொடர்ந்து தெருக்களிலும், வீதிகளிலும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். நேற்று முன்தினம் இரவு மாநகர் முழுவதும் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.
அப்போது பட்டாசுகளில் இருந்த வெளியேறிய புகை நெல்லை மாநகரை சூழ்ந்து புகை மண்டலமாக காட்சி அளித்தது. மாலை நேரத்தில் மழை பெய்து, அதை தொடர்ந்து பணிப்படலம் நிலவியதால், பட்டாசு புகைகள் வெளியேறாமல் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் மின் விளக்குகள், வாகனங்களின் முகப்பு விளக்குகளில் புகை மண்டலம் காட்சி அளித்தது.
தீபாவளி அன்று வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவு பொருட்கள் தெரு ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகளை நிரப்பி இருந்தன. பட்டாசுகள் தெருக்கள், வீதிகளில் வைத்து வெடிக்கப்பட்டதால், பட்டாசு சிதறல்கள் தெருக்களில் பரவி கிடந்தன.
இதையொட்டி நேற்று தெருக்கள், வீதிகளெங்கும் குப்பைகளாக காட்சி அளித்தது. இதனை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே மேயர் பி.எம்.சரவணன் குப்பைகளை அகற்றும் பணியை ஆய்வு செய்தார். டவுன் பகுதிகளில் அதிகமாக சேர்ந்திருந்த குப்பைகளை விரைவாக அப்புறப்படுத்துவதை பார்வையிட்டு பணிகளை விரைவு படுத்தினார். இதே போல் அனைத்து பகுதிகளிலும் பட்டாசு குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி சாலைகள், தெருக்களில் சேர்ந்த 237 டன் குப்பைகள் நேற்று மாநகராட்சி தூய்மை பணியாளர்களால் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது.
வழக்கமான நாட்களில் ஒரு நாளைக்கு 170 டன் குப்பைகள் சேரும் நிலையில், பண்டிகை காரணமாக பட்டாசு குப்பையோடு சேர்ந்து 237 டன் குப்பைகள் அள்ளப்பட்டு உள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.