தமிழக-கேரள எல்லையில் கிடந்த பிணம் பற்றி துப்பு துலங்கியது: வாலிபர் கழுத்தை அறுத்துக்கொலை
தமிழக-கேரள எல்லையில் கிடந்த வாலிபர் பிணம் பற்றி துப்பு துலங்கியது. அவரை கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை காரில் எடுத்து சென்று வீசி உள்ளனர். இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
செங்கோட்டை:
தமிழக-கேரள எல்லையில் கிடந்த வாலிபர் பிணம் பற்றி துப்பு துலங்கியது. அவரை கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை காரில் எடுத்து சென்று வீசி உள்ளனர். இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பிணம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தமிழக-கேரள எல்லைப்பகுதியில், கேரள மாநிலம் ஆரியங்காவு ெரயில் நிலையத்திற்கு அருகில் ஆற்றங்கரையில் வாலிபர் பிணம் ஒன்று கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தென்மலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் தென்மலை போலீசார் வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அவர் சட்டப்பையில் இருந்த வாக்காளர் அடையாள அட்டையை எடுத்து பார்த்தபோது அதில், செங்கோட்டை அருகே காலங்கரை அடுக்குமாடி இல்லத்தை சேர்ந்த சுப்பையா மகன் அன்பழகன் (வயது 39) என்ற முகவரி இருந்தது.
விசாரணை
ஆனால் அவர் எப்படி இறந்தார்? என்பது போன்ற விவரங்கள் தெரியாமல் இருந்தது. உப்பிய நிலையில் இருந்த உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொல்லம் பாரி பள்ளி மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக செங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் தென்மலை போலீசார் விசாரணை நடத்தி துப்பு துலக்கி வந்தனர்.
இந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் அன்பழகன் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
வாலிபர் கைது
இதைத்தொடர்ந்து புனலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத் தலைமையில், தென்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம், சப்-இன்ஸ்பெக்டர் சுபின் தங்கச்சன் மற்றும் போலீசார் கேரளாவிலும், தமிழகத்திலும் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கொலை தொடர்பாக தமிழகத்தில் சாத்தூர் அருகே செம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (30) என்பவரை தமிழக போலீசார் உதவியுடன் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணயில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கழுத்தை அறுத்துக்கொலை
சம்பவத்தன்று வாலிபர் அன்பழகனிடம் நைசாக பேசி காருக்குள் வரவழைத்து உள்ளனர். பின்னர் 4 பேர் சேர்ந்து அன்பழகன் கழுத்து கொலை செய்துள்ளனர். உடலை காரில் கேரளாவுக்கு கொண்டு சென்றனர். ஆரியங்காவு ெரயில் நிலையம் அருகில் ஆற்றங்கரையில் அதிக பள்ளமான இடத்தில் அன்பழகன் உடலை தூக்கி வீசி விட்டு சென்று விட்டனர்.
இந்த கொடூர கொலை தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார், பாலக்காட்டை சேர்ந்த பைசல் உள்ளிட்ட 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
காரணம் என்ன?
அன்பழகனை கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தீவிர விசாரணைக்கு பின்னரே முழு விவரமும் ெதரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட அன்பழகனுக்கு சொந்த ஊர் சங்கரன்கோவில் ஆகும். இவர் மீது சங்கரன்கோவில் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.