பச்சிளங்குழந்தையை சாலையில் வீசிய கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி


பச்சிளங்குழந்தையை சாலையில் வீசிய கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி
x

திருச்சி அருகே பச்சிளங்குழந்தையை சாலையில் வீசிய கல்லூரி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்றவிவகாரம் போலீசாருக்கு தெரிய வந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

திருச்சி

திருச்சி அருகே பச்சிளங்குழந்தையை சாலையில் வீசிய கல்லூரி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்றவிவகாரம் போலீசாருக்கு தெரிய வந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

சாலையோரத்தில் பச்சிளங்குழந்தை

திருச்சியை அடுத்த முக்கொம்பு ராமவாத்தலை வாய்க்கால் பாலத்தின் அருகே சாலையோரத்தில் கடந்த 7-ந்தேதி பிறந்த சில மணிநேரமே ஆன பச்சிளங்குழந்தை கிடந்தது.

இதைகண்ட அப்பகுதி மக்கள் ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த குழந்தையை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாலையோரத்தில் குழந்தையை வீசி சென்றவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

கல்லூரி மாணவி

குழந்தை பிறந்து சில மணி நேரமே இருந்ததால் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் தொடர் விசாரணை நடத்தி ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் குழந்தையை வீசி சென்றது முக்கொம்பு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி என தெரியவந்தது.

மேலும், அந்த மாணவி திருமணம் ஆகாமலேயே ஒருவரை நம்பி ஏமாந்து கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ளார். இந்த விவகாரம் ஊர் மக்களுக்கு தெரிந்தால் அவமானம் என நினைத்து குழந்தையை சாலையோரத்தில் வீசி சென்றது தெரியவந்தது.

தற்கொலை முயற்சி

இதனை போலீசார் கண்டறிந்ததால் மனம் உடைந்த அந்த மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமானவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story