கொளத்தூர் அருகே பாலத்தில் கார் மோதி கல்லூரி மாணவர் பலி
கொளத்தூர் அருகே பாலத்தில் கார் மோதி கல்லூரி மாணவர் பலியானார். நண்பர் படுகாயம் அடைந்தார்.
மேட்டூர்:
கல்லூரி மாணவர்
மேட்டூர் ஒர்க்ஷாப் காலனி பகுதியை சேர்ந்த பலராமன். இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் அர்ஜுன் (வயது 18). கல்லூரி மாணவர்.
இவருடைய நண்பர் மனோஜ் (18). இவர்கள் இருவரும் சில நண்பர்களுடன் தமிழக- கர்நாடக எல்லைப்பகுதியான பாலாறு வரை சென்று விட்டு மேட்டூருக்கு திரும்பி உள்ளனர். அப்போது மனோஜ், அர்ஜூன் இருவரும் ஒரே காரில் வந்துள்ளனர்.
விபத்தில் பலி
கொளத்தூரை அடுத்த சென்றாய பெருமாள் கோவில் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக கார், தரைப்பால தடுப்பு சுவரில் மோதியது. இதில் அர்ஜூன் சம்பவ இடத்திலேயே பலியானார். மனோஜ் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த கொளத்தூர் போலீசார், சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அர்ஜூன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த மனோஜை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.