ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து; கல்லூரி மாணவர் பலி; காதலி-நண்பர் படுகாயம்
தேனி அருகே ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். அவரது காதலி, நண்பர் படுகாயம் அடைந்தனர்.
தேனி அருகே ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். அவரது காதலி, நண்பர் படுகாயம் அடைந்தனர்.
கல்லூரி மாணவர்
தேனி மாவட்டம் வீரபாண்டியை அடுத்த மல்லையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 19). இவர், வீரபாண்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவரும், பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியை சேர்ந்த சிவரஞ்சனி (19) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
சிவரஞ்சனி வீரபாண்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முருகேசன் ஒரு மோட்டார் சைக்கிளில் தனது காதலி சிவரஞ்சனி, நண்பர் ஆகாஷ் ஆகியோரை ஏற்றிக்கொண்டு கொடுவிலார்பட்டி-நாகலாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
பரிதாப சாவு
சிவலிங்கநாயக்கன்பட்டியில் தனியார் பேக்கரி அருகில் சென்றபோது, சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் முருகேசன் திடீரென பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார். சிவரஞ்சனி, ஆகாஷ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் சிவரஞ்சனி புகார் செய்தார். அதன்பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.