சுற்றுலா வந்தபோது மதுபோதையில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவியால் பரபரப்பு
ஆண் நண்பருடன் சுற்றுலா வந்தபோது மதுபோதையில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவியால் பரபரப்பு ஏற்பட்டது.
பேரூர்,
கோவை தொண்டாமுத்தூர் அருகே நரசீபுரம் கிராமத்துக்கு மேற்கே வைதேகி நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் செல்ல வனத்துறை தடை விதித்து உள்ளது. இதனால் வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் உள்ள ஓடையில் சுற்றுலா பயணிகள் குளித்து விட்டு செல்கின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், கோவை மாநகரை சேர்ந்த 20 வயது பெண், தனது ஆண் நண்பருடன் அங்கு வந்தார். அவர்கள் 2 பேரும் நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அந்த பெண் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. அங்கு ஆம்புலன்ஸ் வந்ததும் அந்த பெண்ணை மீட்டு தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அந்த பெண் மதுபோதையில் இருப்பது தெரிய வந்தது.
இது குறித்த தகவலின் பேரில் ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த பெண், கல்லூரி மாணவி என்பதும், அவர் கல்லூரியில் படிக்கும் தனது ஆண் நண்பருடன் வந்ததும். அவர்கள் 2 பேரும் சேர்ந்து மது அருந்திய நிலையில் அந்த மாணவி மயங்கி விழுந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த மாணவி மற்றும் மாணவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.