பெண் தனியாக இருந்த வீட்டில் அத்துமீறி நுழைந்த 3 வாலிபர்களால் பரபரப்பு
பெண் தனியாக இருந்த வீட்டில் அத்துமீறி நுழைந்த 3 வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் வாலிபர் ஒருவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய பெண், சிவகாசியில் விபசாரம் நடப்பதாகவும், அதில் விருப்பம் இருந்தால் ரூ.8 ஆயிரம் கொடுத்து ஜாலியாக இருக்கலாம் என்றும் முன்பணமாக ரூ.4 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அந்த வாலிபர் ஆன்லைன் மூலம் ரூ.4 ஆயிரத்தை செலுத்திவிட்டு தனது நண்பர்கள் 2 பேருடன் செல்போனில் பேசிய பெண் கூறிய முகவரிக்கு சென்றார். பின்னர் அந்த வீட்டிற்குள் நுழைந்த போது அங்கு ஒரு பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார். அவரிடம் வாலிபர்கள் தங்கள் வந்த விவரத்தை தெரிவித்தவுடன் அந்த பெண் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார். இதனால் அருகில் உள்ளவர்கள் வந்து வாலிபர்களை திருடர்கள் என்று நினைத்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வாலிபர்கள் ரூ.4 ஆயிரத்தை இழந்தது தெரியவந்தது. அந்த வாலிபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்போனில் பேசிய பெண் யார்? யாருடைய வங்கி கணக்கிற்கு ரூ.4 ஆயிரம் செலுத்தப்பட்டது? என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.