என்.எல்.சி.யை கண்டித்து முழுஅடைப்பு போராட்டம்:கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் மூடல்பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கின


தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

என்.எல்.சி.யை கண்டித்து பா.ம.க.வினர் அறிவித்த முழுஅடைப்புக்கு ஆதரவாக கடலூர் மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கின.

கடலூர்


நெய்வேலி என்.எல்.சி.யில் நிலக்கரி சுரங்கம் 1, 1ஏ மற்றும் 2 ஆகிய அனல் மின் நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இங்கு தயாரிக்கப்படும் மின்சாரமானது தமிழ்நாட்டில் 40 சதவீத பயன்பாட்டிற்கு போக, மீதமுள்ள மின்சாரம் அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நிலக்கரி வெட்டி எடுப்பதற்கு போதுமான இடம் இல்லாததால், நெய்வேலியை சுற்றியுள்ள வடக்கு வெள்ளூர், அம்மேரி, ஆதண்டார்கொள்ளை, கரிவெட்டி, வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கத்தாழை, மும்முடி சோழகன், வாணிதராயபுரம், வடக்குத்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலத்தை கையகப்படுத்தியது.

இதையடுத்து என்.எல்.சி. நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 9-ந்தேதி விரிவாக்க பணியை தொடங்கியது. ஆனால் வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என்று கூறி பொதுமக்கள் மற்றும் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

7 ஆயிரம் போலீசார் குவிப்பு

மேலும் என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் 11-ந் தேதி (அதாவது நேற்று) முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. அறிவித்திருந்தார். இதையடுத்து முழுஅடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு பா.ம.க.வினர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து ஆதரவு திரட்டினர்.

இதனால் மாவட்டத்தில் பதற்றமான சூழல் உருவானதால் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் டி.ஐ.ஜி.க்கள் பாண்டியன் (விழுப்புரம்), பகலவன் (காஞ்சீபுரம்), கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உள்பட 8 போலீஸ் சூப்பிரண்டுகள், 11 உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், 21 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் மாவட்டம் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பெரும்பாலான கடைகள் மூடல்

இந்த நிலையில் பா.ம.க.வினர் அறிவித்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடலூரில் நேற்று காலை முதல் நகைக்கடைகள், ஜவுளி கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதில் மஞ்சக்குப்பம் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. திருப்பாதிரிப்புலியூர், செம்மண்டலம், சாவடி உள்ளிட்ட பகுதியில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில கடைகள் மட்டும் திறந்திருந்தன. மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் அனைத்தும் வழக்கம்போல் செயல்பட்டன.

கடலூரில் திறந்திருந்த கடைகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் பஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் குருமூர்த்தி, உதயகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். பின்னர் மதியம் 12 மணிக்கு பிறகு ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டன.

நெய்வேலி சுரங்க பகுதி

இதேபோல் நெய்வேலியில் ஒரு சில கடைகள் திறந்திருந்த நிலையில், மந்தாரக்குப்பத்தில் முழுகடையடைப்பு கடைபிடிக்கப்பட்டது. இதனால் மக்கள் நடமாட்டமின்றி கடைவீதிகள் வெறிச்சோடின.

2-வது நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ள மந்தாரக்குப்பத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. பிரதான சாலை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், 2-வது நிலக்கரி சுரங்கம் முன்பு மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதேபோன்று, தற்போது நிலக்கரி சுரங்கம் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வளையமாதேவி பகுதியான சேத்தியாத்தோப்பிலும் கடைகள் அடைத்து இருந்தது. மேலும், விருத்தாசலம், சிதம்பரம், திட்டக்குடி, வடலூர், பண்ருட்டி உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதில் கிராம பகுதிகளில் இருந்த கடைகள் மட்டுமே வழக்கம் போல் திறந்து செயல்பட்டன. இதில் காலையில் மூடப்பட்டிருந்த அனைத்து கடைகளும், மாலையில் திறக்கப்பட்டன.

வழக்கம்போல் இயங்கிய பஸ்கள்

மாவட்டத்தில் முழுஅடைப்புக்கு ஆதரவு தெரிவித்து பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்த போதிலும் பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

கடலூர், நெய்வேலி, சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், வடலூர் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து அரசு பஸ்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்களுக்கு, ஆல்பேட்டை வரையிலும், விருத்தாசலம், சிதம்பரம் பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பஸ்களுக்கு முதுநகர் பிரிவு சாலை வரையிலும் போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

நெய்வேலி, மந்தாரக்குப்பம் பகுதியில் ஒரு சில பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பஸ்சுக்காக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நேரமாக காத்திருந்ததை காணமுடிந்தது.

பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு வந்த பஸ்களில் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறிச் சென்றனர். பஸ்களில் ஏற முடியாத சிலர், வேறு வழியின்றி வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.

மேலும் மாவட்டத்தில் பஸ், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டதாலும், மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் வழக்கம்போல் திறந்திருந்ததாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.


Next Story