ஆறுமுகநேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி கட்டிட தொழிலாளி சாவு
ஆறுமுகநேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி கட்டிட தொழிலாளி பரிதாபமாக பலியானார். மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். உறவினர்கள் சாலைமறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் ெதரியாத வாகனம் மோதியதில் கட்டிட தொழிலாளி பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கட்டிட தொழிலாளி
ஆறுமுகநேரி பெருமாள்புரத்தில் வசித்து வந்தவர் வேம்படிமுத்து மகன் மகேஷ் (வயது 34). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மேகலா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று மதியம் 1.30 மணியளவில் இவர் ஆத்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஆறுமுகநேரி நோக்கி வந்து கொண்டிருந்தார். அவருடன் சக தொழிலாளிகள் 2 பேர் சென்றனர்.
வாகனம் மோதியது
ஆத்தூர் தண்ணீர் பந்தல் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த மகேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மற்ற 2 பேரும் படுகாயங்களுடன் சாலையில் கிடந்தனர். அவர்கள் மீது மோதிய வாகனம் நிற்காமல் சென்று விட்டது.
அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் குரும்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விைரந்து சென்றனர். காயமடைந்த 2 பேரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலைமறியல்
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி செல்வராஜபுரத்திலிருந்து மகேஷ் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அந்த பகுதிக்கு திரண்டு சென்றனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை கண்டுபிடித்து, டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவர்கள் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் கற்களை அடுக்கி வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பாலமுருகன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அமலோற்பவம், பிரபாகுமார் ஆத்தூர் சப்- இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் ஆகியோர் வந்து மகேஷ் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற வாகனத்தையும், டிரைவரையும் விரைவில் பிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததன் பேரில், சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த போராட்டத்தால் திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.