மது போதையில் நடனமாடிய கட்டிட தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பலி
நாட்டறம்பள்ளி அருகே மதுபோதையில் நடனம் ஆடிய கட்டிட தொழிலாளி கிணற்றில் தவறி விழந்து பரிதாபமாக உயிரிழந்தார் தீயணைப்பு துறையினர் சுமார் 9 மணி நேரம் போராடி உடலை மீட்டனர்.
மதுபோதையில் தவறி விழுந்தார்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த டோல்கேட் ஊசலான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் அறிவழகன் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். அறிவழகன் குடி பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்தி விட்டு தனது வீட்டின் எதிரே உள்ள கிணற்று அருகே நடனம் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் அறிவழகன் மது அருந்தி விட்டு கிணற்று அருகே நடனம் ஆடியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் திடீரென கிணற்றில் தவறி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பிணமாக மீட்பு
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று அறிவழகனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 9 மணி நேரம் போராடி நள்ளிரவு 2 மணியளவில் அறிவழகனை பிணமாக மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலிசார் சம்பவம் இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதையில் நடனமாடிய கட்டிட தொழிலாளி கிணற்றில் விழுந்து உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.