மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடந்தது: மதுரையில் 'நம்ம ஊரு மோடி' பொங்கல் விழா - அண்ணாமலை பங்கேற்பு


மதுரையில், ‘நம்ம ஊரு மோடி பொங்கல் விழா’ நேற்று நடந்தது. அதில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

மதுரை


மதுரையில், 'நம்ம ஊரு மோடி பொங்கல் விழா' நேற்று நடந்தது. அதில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

ஆலோசனை கூட்டம்

பா.ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. அதில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் வரவேற்றார். கட்சியின் மாநில துணை தலைவர்கள் நயினார் நாகேந்திரன், கே.பி.ராமலிங்கம், நாராயணன் திருப்பதி, மாநில பொதுச் செயலாளர்கள் கேசவ விநாயகம், ராம சீனிவாசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கி பேசினார். அதனைத்தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர்கள் பேசினர்.

108 பெண்கள் பொங்கலிட்டனர்

இந்த கூட்டத்தை தொடர்ந்து, பரவையில் உள்ள முத்து நாயகி அம்மன் கோவில் வளாகத்தில் தை பொங்கலை முன்னிட்டு 'நம்ம ஊரு மோடி' பொங்கல் விழா நடந்தது. அதில் அண்ணாமலை கலந்து கொண்டார். அவருக்கு மேளதாளங்கள் முழங்க கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

விழாவில் 108 பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். அதன் தொடர்ச்சியாக 108 பசுக்களுக்கு கோபூஜை விழா நடந்தது. மேலும் விழாவில் பரதநாட்டியம், சிலம்பாட்டம், கரகாட்டம், கிராமிய பாடல்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன.


Next Story