கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அடுத்த மாதம் 11-ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை முன்னிலையில், மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:- அரசு விதிமுறைகளை பின்பற்றி நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். அனைத்து அமைப்பு பிரதிநிதிகளும் போலீஸ் துறையுடன் ஒருங்கிணைந்து தேவையான முன் அனுமதிகளை பெற்று ஒத்துழைப்பு தர வேண்டும். போலீசார் வழிகாட்டுதலின்படி அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் விளம்பர பலகை வைக்க வேண்டும். வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் போலீஸ் அனுமதி பெற்று வந்து செல்ல வேண்டும். நினைவிடத்திற்கு பொதுமக்கள் வந்து செல்ல சிறப்பு பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளியூரிலிருந்து வரக்கூடியவர்கள் போலீசார் தெரிவித்த உரிய வழித்தடங்கள் வழியாக வந்து செல்ல வேண்டும் என்றார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல், ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. கோபு, போலீஸ், வருவாய்த்துறை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.