மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதி அக்காள்- தங்கை பலி
ஆம்பூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் தந்தையுடன் பள்ளிக்கு சென்ற அக்காள்- தங்கை சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
ஆம்பூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் தந்தையுடன் பள்ளிக்கு சென்ற அக்காள்- தங்கை சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
பள்ளிக்கு சென்றனர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வீராங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி அனுராதா. இவர்களுக்கு ஜெயஸ்ரீ (வயது 16), வர்ஷாஸ்ரீ (12) என 2 மகள்கள் இருந்தனர். ஆம்பூர் புதுகோவிந்தாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஜெயஸ்ரீ பிளஸ்-1, வர்ஷாஸ்ரீ 6-ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று காலை தண்டபாணி தனது மகள்கள் இருவரையும் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.
ஆம்பூர் ஓ.ஏ.ஆர். தியேட்டர் அருகே சென்றபோது ஓசூரில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தண்டபாணி மோட்டார் சைக்கிள் மீது மோதி சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் மீதும் மோதி சர்வீஸ் சாலையில் புகுந்தது. அப்போது லாரியில் இருந்த கன்டெய்னர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அக்காள்- தங்கை பலி
இந்த விபத்தில் லாரி சக்கரங்கள் ஜெயஸ்ரீ, வர்ஷா ஸ்ரீ ஆகியோர் மீது ஏறியதில் அவர்கள் இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தண்டபாணி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் போலீஸ் சூப்பிரண்டு சரவணன், டவுன் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் உள்ளிட்ட போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை ரோந்து போலீசார் விபத்தில் இறந்த மாணவிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை சிறிது நேரத்தில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் லாரி டிரைவர் சென்னை பகுதியை சேர்ந்த ஜார்ஜ் ஜெயசீலன் (35) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலெக்டர் ஆறுதல் கூறினார்
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இதுகுறித்து தகவலறிந்து வந்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன், ஆம்பூர் நகர மன்ற துணைத் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
பள்ளிக்கு சென்ற அக்காள்- தங்கை லாரியில் சிக்கி பலியான சம்பவம் ஆம்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.