கூலி வேலைக்கு செல்லாமல் சொந்த காலில் நிற்க வேண்டும்
தொழிற்பயிற்சி மையத்தில் மாணவிகள் படித்து கூலி வேலைக்கு செல்லாமல் சொந்தகாலில் நிற்க வேண்டும் என்று சரவணன் எம்.எல்.ஏ. பேசினார்.
கலசபாக்கம்
தொழிற்பயிற்சி மையத்தில் மாணவிகள் படித்து கூலி வேலைக்கு செல்லாமல் சொந்தகாலில் நிற்க வேண்டும் என்று சரவணன் எம்.எல்.ஏ. பேசினார்.
கருத்தரங்கு
கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சர்வதேச சகோதரிகள் தினத்தை முன்னிட்டு தொழில் பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள் என்ற மைய கருத்தினை கொண்டு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார்.
கலசப்பாக்கம் தொகுதி சரவணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-
தமிழகத்தில் கல்வி வளர்ச்சி பெற வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.
இங்கு படிக்கும் ஆண் பிள்ளைகள் படிப்பை முடித்தவுடன் வெளியில் உள்ள கம்பெனிகளுக்கு பணிக்கு செல்லாமல் இங்கேயே இருந்து விடுகிறீர்கள். இதனால் உங்களின் படிப்பின் முக்கியத்துவமும் குறிப்பாக வருமானமும் இல்லாமல் போகிறது.
111 காலி இடங்கள்
இங்கு மொத்தம் 256 மாணவ-மாணவிகள் சேரலாம். இதுவரை 145 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். இன்னும் 111 இடங்கள் காலியாக உள்ளது. குறிப்பாக பெண் பிள்ளைகள் பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்காதீர்கள்.
இங்கு அமைந்திருக்கும் தொழிற்பயிற்சி நிலையமானது மாவட்டத்திலேயே வேறு எங்கும் அமையவில்லை. காரணம் மலைவாழ் மக்களின் பிள்ளைகள் படித்து தொழில் பயிற்சியில் முன்னேறி இப்பகுதியை செழிப்படைய வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த உலகத்தரம் வாய்ந்த தொழிற்பயிற்சி நிலையத்தை திறந்து வைத்துள்ளது.
சொந்த காலில் நிற்க வேண்டும்
இதனை விட்டு விட்டு நீங்கள் குடும்பம் குடும்பமாக கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு சென்று அடிமையாக கூலி வேலை பார்க்கிறீர்கள். மேலும் ஆண்கள் செம்மரம் வெட்ட செல்கிறீர்கள். இது மிகவும் தவறு.
நீங்கள் படிப்பதற்கும், படித்து முடித்து தொழில் தொடங்குவதற்கும் வங்கிகள் கடனுதவி அளிக்கிறது. இதனை வைத்து நீங்கள் யாருக்கும் அடிமையாக வாழாமல், கூலி வேலைக்கு செல்லால் சொந்த காலில் நிற்கலாம். எனவே இங்குள்ள பெண் பிள்ளைகள் இந்த தொழிற்பயிற்சி மையத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்
நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பவுன்ராஜ் யூனியன் துணை சேர்மன் மகேஸ்வரிசெல்வம் கோவிலூர் தலைவர் நடேசன் மற்றும் தொழிற்பயிற்சி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.