சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்ரோல் பாட்டிலுடன் வந்த தம்பதியால் பரபரப்பு
சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்ரோல் பாட்டிலுடன் வந்த தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.
பெட்ரோல் பாட்டில்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் நேற்று தனது மனைவி மகாலட்சுமியுடன் மொபட்டில் சேலம் கலெக்டர் அலுவலத்துக்கு வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சோதனையிட முயற்சி செய்தனர்.
இதற்கு ராஜமாணிக்கம் எதிர்ப்பு தெரிவித்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்டனர். இதில் ஒரு லிட்டர் பாட்டிலில் பெட்ரோல் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தீக்குளித்து தற்கொலை செய்யும் எண்ணத்துடன் வந்த அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பட்டா கேட்டு மனு
போலீசாரிடம் ராஜமணிக்கம் கூறும் போது, நாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து எங்களை சிலர் விரட்டுவதற்காக தொடர்ந்து இடையூறு செய்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த நாங்கள் தீக்குளித்து தற்கொலை செய்யும் நோக்கத்தில் இங்கு வந்தோம். மேலும் அவர்கள் மீது அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேட்டூர் அருகே உள்ள பெரியசோரகை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் கார்மேகத்தை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் எங்கள் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் தனி நபருக்கு விடாமல் பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அரசு பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி உள்ளிட்டவை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.