லாரியில் அடிபட்டு இறந்த வளர்ப்பு நாய்க்கு படத்திறப்பு நிகழ்ச்சி நடத்திய தம்பதி
குழந்தை இல்லா தம்பதியிடம் செல்லப்பிள்ளைபோல வளர்ந்த நாய் லாரியில் அடிபட்டு இறந்தது. அந்த நாய்க்கு அந்த தம்பதி படத்திறப்பு நிகழ்ச்சி நடத்தினர்.
குழந்தை இல்லா தம்பதியிடம் செல்லப்பிள்ளைபோல வளர்ந்த நாய் லாரியில் அடிபட்டு இறந்தது. அந்த நாய்க்கு அந்த தம்பதி படத்திறப்பு நிகழ்ச்சி நடத்தினர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடந்த இந்த நிகழ்ச்சி பற்றிய விவரம் வருமாறு:-
குழந்தைகள் இல்லை
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கருப்பம்புலம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம்(வயது 46). இவருடைய மனைவி அமுதா(40). இவர்களுக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை.
இவர்கள் அப்பு என்ற நாயை கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வந்தனர். தர்மலிங்கம் தனது வீட்டுக்கு அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மளிகை கடைக்கு அருகே நாய் அப்பு விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தது. இதைப்பார்த்த தர்மலிங்கமும், அவருடைய மனைவியும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
பெற்ற குழந்தையைப்போல்...
தாங்கள் பெற்ற குழந்தையை போல பாசம் காட்டி, அன்பை ஊட்டி வளர்த்து வந்த நாய் லாரியில் அடிபட்டு இறந்தது தம்பதிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ெசல்லப்பிள்ளை போல வளர்த்து வந்த அந்த நாயின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து அவர்களுடைய தோட்டத்திலேயே மனிதர்களுக்நு நடத்துவதுபோன்று இறுதி சடங்குகள் செய்து புதைத்தனர்.
அப்போது தர்மலிங்கம் மொட்டை அடித்து இறுதி சடங்குகளை செய்தது அக்கம், பக்கத்தினரையும் கண்ணீர் விட செய்தது.
படத்திறப்பு நிகழ்ச்சி
இறுதி சடங்கை தொடர்ந்து நாய் அப்புவிற்கு படத்திறப்பு நிகழ்ச்சி நடத்த தர்மலிங்கம்-அமுதா தம்பதியினர் முடிவு செய்தனர். இதற்கான பத்திரிகையை வாட்ஸ்-அப் மூலம் உறவினர்கள் நண்பர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு அனுப்பினர். அதன்படி நேற்று அவர்களுடைய இல்லத்தில் நாய்க்கு படத்திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
அப்போது நாயின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதை கருப்பம்புலம் அரசு கால்நடை தலைமை டாக்டர் மீனாட்சி சுந்தரம் திறந்து வைத்து மாலை அணிவித்தார். இதையடுத்து உறவினர்கள், நண்பர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது அமுதா கதறி, கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்தது.
பிடித்த உணவுகளுடன் படையல்
வளர்த்த நாய்க்காக நடந்த படத்திறப்பு நிகழ்ச்சி குறித்த தகவல்களை வாட்ஸ்-அப் மூலமாக அறிந்து கொண்ட பலர் நிகழ்ச்சியில் திரளாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் நாய் அப்புவிற்கு பிடித்த சிக்கன் பிரியாணி, பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்களுடன் படையல் வைக்கப்பட்டது. பின்னர் படையலில் இருந்த உணவு பொருட்கள் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. நாய்க்காக நடந்த படத்திறப்பு நிகழ்ச்சியில் கால்நடை டாக்டர்கள், கால்நடை மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட விலங்கு நல ஆர்வலர்களும் கலந்து கொண்டு உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.