குடும்ப தகராறில் கிணற்றில் குதித்த தம்பதி; கணவர் சாவு


குடும்ப தகராறில் கிணற்றில் குதித்த தம்பதி; கணவர் சாவு
x

திருப்பத்தூர் அருகே குடும்ப தகராறில் தம்பதி கிணற்றில் குதித்தனர். இதில் கணவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே குடும்ப தகராறில் தம்பதி கிணற்றில் குதித்தனர். இதில் கணவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

குடும்ப தகராறு

திருப்பத்தூர் தாலுகா பழைய அத்திகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜ். அவரது மகன் விஜயகாந்த் (வயது 32), மகளிர் திட்ட அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், கந்திலி அருகே உள்ள கரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த சுகன்யா (27) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

சுகன்யா, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியராக பணிபுரிந்து வருகிறார். தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகன் உண்டு. இந்த நிலையில் நேற்று மாலை கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

இதனால் சுகன்யா அவரது வீட்டின் பின்புறம் உள்ள 40 அடி தண்ணீர் உள்ள கிணற்றில் குதித்தார். அதிர்ச்சி அடைந்த விஜயகாந்த் தானும் தற்கொலை செய்து கொள்வதாக கூறி அதே கிணற்றில் விழுந்துள்ளார்.

கணவர் சாவு

உடனே அருகில் இருந்தவர்கள் கிணற்றில் குதித்து சுகன்யாவை காப்பாற்றி மேலே கொண்டு வந்தனர். விஜயகாந்த்தை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து, கிணற்றில் இறங்கி பாதாள கொலுசு கொக்கி மூலம் விஜயகாந்த்தை மேலே கொண்டு வந்து பார்த்த போது தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.

திருப்பத்தூர் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story