கொடைக்கானலில் தங்கும் விடுதியில் தம்பதி தற்கொலை; குழந்தை இல்லாத ஏக்கத்தில் விபரீதம்
கொடைக்கானலில் தங்கும் விடுதியில், குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தற்கொலை செய்துகொண்டனர்.
கொடைக்கானலில் தங்கும் விடுதியில், குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தற்கொலை செய்துகொண்டனர்.
மதுரை தம்பதி
மதுரை தல்லாகுளம், மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 46). இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்திருந்தார். இவருடைய மனைவி சித்ராபுஷ்பம் (43). இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 23-ந்தேதி இந்த தம்பதியினர், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். அவர்களுடன் சித்ராபுஷ்பத்தின் தாய் மாசிலாராஜபாண்டி (76) என்பவரும் வந்தார்.
இவர்கள் கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே அண்ணாசாலையில் உள்ள நகராட்சி தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். கடந்த 3 நாட்களாக அவர்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்தனர். அதன்படி, நேற்று முன்தினம் சுற்றுலா இடங்களுக்கு சென்றுவிட்டு, அன்றைய தினம் இரவு வழக்கம்போல் தங்கும் விடுதிக்கு வந்தனர். அப்போது 3 பேரும் விடுதி அறையில் வெகுநேரமாக பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இதற்கிடையே நள்ளிரவு ஆனதும் மாசிலாராஜபாண்டி அயர்ந்து தூங்கிவிட்டார். அதைத்தொடர்ந்து ராஜ்குமாரும், சித்ராபுஷ்பமும் விடுதி அறைக்குள் உள்ள கழிப்பறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
இதற்கிடையே நேற்று அதிகாலை கண்விழித்த மாசிலாராஜபாண்டி, அறையில் மகளும், மருமகனும் இல்லாததை பார்த்தார். இதனால் அவர், 2 பேரின் பெயர்களை கூறி அழைத்தார். ஆனால் பதில் வரவில்லை. பின்னர் விடுதி அறையின் கழிப்பறை கதவை திறந்து பார்த்தபோது, அங்கு ராஜ்குமாரும், சித்ராபுஷ்பமும் தூக்கில் தொங்கி கொண்டிருந்தனர்.
இதனை பார்த்து மூதாட்டி அதிர்ச்சியடைந்தார். அப்போது அவர் கதறி அழுதபடி பக்கத்து அறைகளில் தங்கியிருந்த நபர்களிடமும், தங்கும் விடுதி மேலாளரிடமும் தனது மகள், மருமகன் தூக்கில் தொங்குவதாக கூறினார். உடனே அவர்கள் இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
குழந்தை இல்லாத ஏக்கம்
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிக்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். பின்னர் விடுதி அறையின் கழிப்பறையில் தூக்கில் தொங்கியபடி கிடந்த ராஜ்குமார், சித்ராபுஷ்பம் ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராஜ்குமாருக்கும், சித்ராபுஷ்பத்துக்கும் திருமணமாகி 13 ஆண்டுகளாகிறது. இருப்பினும் தங்களுக்கு குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் தம்பதி தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி, கொடைக்கானலுக்கு வந்த அவர்கள், சம்பவத்தன்று இரவு முதலில் விஷத்தை குடித்தனர். அதன்பிறகு கழிப்பறைக்கு சென்று தனித்தனி கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கும் விடுதியில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியது.