நிலத்தை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி
நிலத்தை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாழப்பாடி அருகே உள்ள குறிச்சி கிராமத்தை சேர்ந்த செல்லமுத்து (வயது 80), இவருடைய மனைவி ஜெகதாம்பாள் (65) ஆகிய இருவரும் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். நுழைவு வாசல் அருகே அவர்கள் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து, விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், எங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தின் பேரில், ஒருவரிடம் ரூ.40 ஆயிரம் கடன் பெற்றோம். அதற்கு ரூ.60 ஆயிரம் வரை திருப்பி கொடுத்த நிலையில், நிலத்தை திரும்ப தர மறுக்கிறார். மேலும் நிலத்தை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. எனவே நிலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுக்க அழைத்து செல்லப்பட்டனர். கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.