ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி
கந்துவட்டி கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கந்துவட்டி கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
கோபிசெட்டிபாளையம் கொங்கர்பாளையம் மேற்குவீதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 44). விவசாயி. இவருடைய மனைவி பாப்பா. இவர்கள் 2 பேரும் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க நேற்று வந்தனர். அப்போது அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்து இருந்த கேனை எடுத்து தங்கள் மீது டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்கள். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் உடனடியாக விரைந்து சென்று அவர்களிடம் இருந்து டீசல் கேனை வாங்கி அப்புறப்படுத்தினார்கள்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியபோது சுந்தரம் கூறியதாவது:-
கந்துவட்டி கொடுமை
எனக்கு சொந்தமான சுமார் 1½ ஏக்கர் நிலம் கொங்கர்பாளையத்தில் உள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு வாணிப்புத்தூரை சேர்ந்த 3 பேரிடம் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கி இருந்தேன். வட்டியுடன் சேர்த்து கடந்த 2019-ம் ஆண்டு வரை மொத்தம் ரூ.2 லட்சத்து 94 ஆயிரம் செலுத்தி உள்ளேன். இந்த கடனுக்காக அடமானம் வைத்த நில பத்திரத்தை வைத்து கொண்டு அவர்கள், வேறு ஒருவருக்கு நிலத்தை விற்று விட்டார்கள். ஆனால் இன்று வரை நான்தான் அங்கு விவசாயம் செய்து வருகிறேன். எங்களது நிலத்தை தர வேண்டும் என்றால் மேலும், ரூ.25 லட்சம் வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். எனவே கந்துவட்டி கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.