கிளி, குருவிகள் வைத்திருந்த தம்பதிக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்; வனத்துறை அதிரடி நடவடிக்கை
பழனியில், விற்பனைக்காக கிளி, குருவிகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த தம்பதிக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
பழனியில், விற்பனைக்காக கிளி, குருவிகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த தம்பதிக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
பறவைகள் விற்பனை
பழனி வனப்பகுதியில் உள்ள விலங்குகள், பறவைகளை பாதுகாக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாதுகாக்கப்பட்ட பறவை இனங்களான கிளி, முனியாஸ் குருவிகள், 'ரெட் மியாஸ்' குருவிகளை வீடு, தோட்டங்களில் வளர்க்கப்படுவதை தடுக்கவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் பழனி அருகே கோதமங்கலம் பகுதியில் கிளி, 'ரெட் மியாஸ்' குருவிகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக பழனி வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் திலீப் உத்தரவுப்படி, பழனி வனச்சரக அலுவலர் (பொறுப்பு) குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் கோதமங்கலம் அடுத்த பெரும்பாறை பகுதியில் சோதனை செய்தனர்.
கிளிகள் பறிமுதல்
அப்போது ஒரு வீட்டில் கிளிகள், 'ரெட் மியாஸ்' குருவிகள் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது மேலும் கிளிகளை பிடிக்க பயன்படுத்திய வலையும் இருந்தது. அதையடுத்து வீட்டில் இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் பழனி ஆவணி மூலவீதியை சேர்ந்த மாரிக்கண்ணு (வயது 50), அவரது மனைவி பார்வதி (40) என்பதும், இவர்கள் தோட்ட பகுதியில் வலையை பயன்படுத்தி கிளி, 'ரெட் மியாஸ்' குருவிகளை பிடித்து பெரும்பாறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் விற்பனைக்கு வைத்து இருந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த 40 பச்சை கிளிகள், 70 ரெட் மியாஸ் குருவிகள், வலை, கூண்டுகள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் வன அலுவலர் உத்தரவுப்படி மாரிக்கண்ணு, பார்வதி தம்பதிக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் பறிமுதல் செய்த கிளிகள், ரெட் மியாஸ் பறவைகளை பழனி வனப்பகுதிக்கு கொண்டு சென்று திறந்து விட்டனர்.
கடும் நடவடிக்கை
இதுகுறித்து வனச்சரகர் குமரேசன் கூறுகையில், கிளி போன்ற சில பறவைகளை வீட்டில் வளர்க்க தடை உள்ளது. எனவே கிளி, ரெட்மியாஸ், முனியாஸ் வகை பறவைகளை யாரும் விற்கவோ, வாங்கவோ கூடாது. அவ்வாறு மீறி வாங்கி வீட்டில் வளர்த்தால் அவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.