காளை விடும் விழாவில் மாடு முட்டி கட்டிட மேஸ்திரி பலி


காளை விடும் விழாவில் மாடு முட்டி கட்டிட மேஸ்திரி பலி
x

மேட்டு இடையம்பட்டியில் நடந்த காளை விடும் விழாவில் மாடு முட்டி கட்டிட மேஸ்திரி பலியானார்.

வேலூர்

காளை விடும் விழா

அடுக்கம்பாறை ஊராட்சி, மேட்டுஇடையம்பட்டி கிராமத்தில் 62-ம் ஆண்டு காளை விடும் திருவிழா நேற்று நடந்தது. வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருதது. சாலை நடுவே மண் கொட்டப்பட்டிருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர், காவல்துறை மற்றும் மருத்துவ குழுவினர் முகாமிட்டிருந்தனர். காளைகளுக்கு, காலை 7 மணி அளவில் வீதி காண்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர் நாட்டாமை ராமன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் வேலாயுதம், மேட்டுக்குடி சேட்டு, கோவில் நிர்வாகி ஜெயசீலன், ஞானசேகரன், பூங்காவனம், துளசி மற்றும் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் சங்கர் வரவேற்றார்.

வேலூர் உதவி கலெக்டர் கவிதா, டெல்லியில் இருந்து வந்த பீட்டா அமைப்பு தலைவர் மிட்டல் ஆகியோர் கொடியசைத்து விழாவை தொடங்கி வைத்தனர். அதன்பின்னர் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் வேலூர், அணைக்கட்டு, ஊசூர், பென்னாத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. தெருவில் சீறிபாய்ந்து ஓடிய காளைகளை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்து விரட்டினர்.

விழாவை காண ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இலக்கை நோக்கி அதிவேகமாக சீறிபாய்ந்து ஓடி முதலிடம் பிடித்த காளைகள் உள்பட மொத்தம் 78 பரிசுகள் வழங்கபட்டது. விழாவில் மாடுகள் முட்டியதில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாடு முட்டி பலி

வேலூர் விருப்பாட்சிபுரம் குளவிமேடு பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஏழுமலை (வயது 30) காளை விடும் விழாவை காண நண்பர்களுடன் சென்றுள்ளார். அவர் தடுப்புகள் முடிவடையும் இடத்தில் நின்றபடி ஆரவாரம் செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது சீறிப்பாந்து வேகமாக வந்த காளை ஒன்று எதிர்பாராத விதமாக ஏழுமலையின் மார்பு, கழுத்தில் முட்டியது. இதில் அவர் நிலைகுலைந்து சரிந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த ஏழுமலை ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார். இதைக்கண்ட இளைஞர்கள் உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள மருத்துவ முகாமில் முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏழுமலை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்துபோன ஏழுமலைக்கு மஞ்சுளா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். மாடு விடும் விழாவை வேடிக்கை பார்க்க சென்ற கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குளவிமேடு மற்றும் மேட்டு இடையம்பட்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story