விவசாய நிலத்தில் வைத்திருந்த நாட்டு வெடி குண்டு வெடித்து பசு மாடு காயம்
நாட்டு வெடி குண்டு வெடித்து பசு மாடு காயம் அடைந்தது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தை அடுத்த சுண்ணாம்புபள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 37). விவசாயி. இவர் விவசாயம் செய்வதோடு கறவை மாடுகளையும் வளர்த்து வருகிறார். இந்த நிலையில், சுண்ணாம்பு பள்ளம் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் அருகே சுதாகர் தன்னுடைய பசு மாட்டை மேய்ச்சலுக்காக நேற்று கட்டியிருந்தார். அப்போது காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக பூமியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை எதிர்பாராத விதமாக பசுமாடு கடித்ததாக கூறப்படுகிறது.
இதில் நாட்டு வெடிகுண்டு வெடித்து பசு மாட்டின் வாய்ப்பகுதி கிழிந்து காயமடைந்துள்ளது. வெடி சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆலங்காயம் போலீசார், ஆலங்காயம் வனத்துறையினர், மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்ததனர். அதனேபேரில் விரைந்து வந்த அதிகாரிகள் உடனடியாக மாட்டிற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். மேலும், சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.