மாஞ்சா நூலில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய காகம்
நாகர்கோவில் அருகே மாஞ்சா நூலில் சிக்கி அந்தரத்தில் தொங்கி பறக்க முடியாமல் தவித்த காகத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே மாஞ்சா நூலில் சிக்கி அந்தரத்தில் தொங்கி பறக்க முடியாமல் தவித்த காகத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
காகம் சிக்கியது
நாகர்கோவில் அருகே களியங்காட்டில் மார்க் என்பவரின் வீட்டின் முன்பு 60 அடி உயர தென்னை மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தில் பட்டம் விடப்பட்ட மஞ்சா நூல் சிக்கியிருந்தது.
இந்தநிலையில் நேற்று காலை ஒரு காகம் எதிர்பாராத விதமாக அந்த மாஞ்சா நூலில் சிக்கிக் கொண்டது. இதனால் அந்த காகம் பறக்க முடியாமல் அந்தரத்தில் தொங்கியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் உதவி அதிகாரி துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து காகத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனத்தில் ஏறி காகத்தின் காலில் சிக்கி இருந்த மாஞ்சா நூலை அறுத்து காகத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் காகத்துக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அதை மீட்டும் பறக்கவிட்டனர்.
நாய் மீட்பு
இதே போல பழவிளை அருகே உள்ள விளாத்திவிளை என்ற ஊரில் வளர்ப்பு நாய் ஒன்று 60 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. அந்த நாய் கடந்த 2 நாட்களுக்கு முன்பே கிணற்றில் விழுந்து விட்டது. ஆனால் நாய் கிணற்றுக்குள் விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று நாய் குரைக்கும் சத்தம் கேட்டு கிணற்றுக்குள் எட்டி பார்த்தபோது நாய் கிணற்றுக்குள் கிடந்தது தெரியவந்தது.
இதுபற்றிய தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு கூடையை போன்ற வலையை விரித்தபடி உள்ளே இறக்கினர். அதில் அந்த நாய் தொற்றிக் கொண்டது. உடனே பாதுகாப்பாக மேலே கொண்டு வந்தனர். தொடர்ந்து நாய்க்கு உணவு அளித்து உரியவரிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர். காகம் மற்றும் நாயை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.