ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற வேண்டும்
வலங்கைமான் கடைத்தெருவில் உள்ள ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வலங்கைமான் கடைத்தெரு
வலங்கைமான் கடைத்தெரு கும்பகோணம்- மன்னார்குடி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இந்த சாலையில் சென்னையில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் வாகனங்களும், பட்டுக்கோட்டையில் இருந்து கும்பகோணம் செல்லும் வாகனங்களும் அதிக அளவில் சென்று வருகிறது. உலக அளவில் பிரசித்தி பெற்ற குரு தலமான ஆலங்குடி இந்த வழித்தடத்தில் அமைந்துள்ளது. இ்ந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
முறிந்து விழும் நிலையில் மின்கம்பம்
இந்த கடைத்தெருவில் உள்ள கும்பகோணம்-மன்னார்குடி மெயின் ேராட்டில் பல ஆண்டுகளாக இரும்பு மின்கம்பம் உள்ளது. தற்போது இந்த மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி முழுவதும் அரிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தநேரத்திலும் முறிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆபத்து ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் செல்கின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறிந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிதாக மின்கம்பம் அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.