காரில் புகையிலை பொருட்கள் கடத்திய வியாபாரி கைது
உவரி அருகே காரில் புகையிலை பொருட்கள் கடத்திய வியாபாரி கைது செய்யப்பட்டார்
திசையன்விளை:
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு பாஸ்கரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு உவரி அருகே உள்ள காரிகோவில் விலக்கில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் ஒரு மூட்டை புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக காரை ஓட்டிவந்த காளி குமாரபுரம் முத்துராஜா மகன் வாலகுரு (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை மூட்டையுடன், காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கோடாவிளையில் உள்ள தோட்டத்தில் புகையிலை மூட்டைகள் பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தோட்டத்தில் பதுக்கி வைத்து இருந்த 8 மூட்டை புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வாலகுருவிடம் மொத்தம் 169 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இவர் திசையன்விளை, உவரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்ய பதுக்கிவைத்து இருப்பது தெரியவந்தது. இவருக்கு ஆத்தங்கரை பள்ளிவாசலில் தங்கும் விடுதி மற்றும் கடை உள்ளது.