ராமேசுவரம் கோவில் கருவறையை செல்போனில் புகைப்படம் எடுத்த பக்தர்
ராமேசுவரம் கோவில் கருவறையை செல்போனில் புகைப்படம் எடுத்த பக்தர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேசுவரம்,
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதுபோல் பாதுகாப்பு கருதி ராமேசுவரம் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்லவும் போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இலவச தரிசன பாதையில் வந்த வட மாநில பக்தர் ஒருவர் தடையை மீறி உள்ளே செல்போனை கொண்டு சென்று உள்ளார்.
அதோடு இலவச தரிசன பாதையில் நின்றபடி கோவிலின் கருவறையில் உள்ள சாமியை செல்போனில் புகைப்படம் பிடித்ததாக கூறப்படுகின்றது. செல்போனில் கருவறையில் உள்ள சாமியை படம் பிடித்த அந்த பக்தர் அந்த படத்தை இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.
தற்போது அந்த படம் பலரது செல்போனிலும் வலம் வருகின்றது. ராமேசுவரம் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை அமலில் உள்ள நிலையிலும் தடையை மீறி பக்தர் ஒருவர் செல்போனை உள்ளே கொண்டு சென்றதுடன் மட்டுமல்லாமல் கோவிலின் கருவறையில் உள்ள சாமியையும் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது கோவிலில் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.