பறவைக்காவடி எடுத்து பரவசப்படுத்திய பக்தர்
திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாவில் பறவைக்காவடி எடுத்து பக்தர் பரவசப்படுத்தினார்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதையொட்டி கடந்த 20-ந்தேதி மத நல்லிணக்க விழா நடந்தது. மேலும் திண்டுக்கல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பூச்சொரிதலுடன் அம்மன் வீதி உலா வந்தது. நேற்று முன்தினம் குழந்தை வேல் நந்தவனத்தில் இருந்து முளைப்பாரி, பால்குடம் எடுத்து கரகம் பாலித்து முக்கிய வீதிகள் வழியாக அம்மன் கோவிலை வந்தடைந்தது.
இதைத்தொடர்ந்து மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தும், கிடா வெட்டியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பிறகு ஆன்மிக குழு சார்பில் செல்லாக்குத்து ஆட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து பிரபாகரன் என்ற பக்தர், பறவைக்காவடி எடுத்து பரவசப்படுத்தினார். கோவிலில் இருந்து புறப்பட்ட பறவைக்காவடி மேட்டுப்பட்டியின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இந்த விழாவில் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) அம்மன் மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் நாட்டாண்மை அழகர்சாமி, நிர்வாகிகள் முருகேசன், கணேசன் பூசாரிகள் காளிதாஸ், கைலாசபதி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.