ஊராட்சி ஒன்றிய பெண் துணைத்தலைவர் குடும்பத்தினருடன் போலீஸ் நிலையத்தில் தர்ணா


ஊராட்சி ஒன்றிய பெண் துணைத்தலைவர் குடும்பத்தினருடன் போலீஸ் நிலையத்தில் தர்ணா
x

ஊராட்சி ஒன்றிய பெண் துணைத்தலைவர் குடும்பத்தினருடன் போலீஸ் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவராக இருப்பவர் சாந்தா தேவி. தி.மு.க.வை சேர்ந்த இவர் நேற்று இரவு தனது கணவரான அரசு பஸ் டிரைவரும், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கவுன்சில் தலைவருமான குமார் மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுடன் போலீசாரை கண்டித்து பெரம்பலூர் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அப்போது சாந்தா தேவி கூறுகையில், நான் உடல் நலக்குறைவால் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு காரில் சென்றேன். என்னுடன் எனது மகன் மாறன் (24), என்னுடைய தங்கை மகன் லோகேஷ் (19) ஆகியோர் வந்தனர். அப்போது பெரம்பலூர் மாவட்ட தனிப்படை போலீசார், பெரம்பலூரில் சினிமா இயக்குனர் செல்வராஜ் என்ற அப்துல் ரகுமான் கொலை வழக்கில் சம்பந்தமில்லாத மாறன், லோகேஷை பிடித்து மறைமுகமான இடத்தில் வைத்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை வழக்கில் சம்பந்தமில்லாமல் பிடித்து வைத்திருக்கும் எனது மகனையும், தங்கையின் மகனையும் விடுவிக்க வேண்டும், என்றார்.இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி தலைமையிலான போலீசார் போலீஸ் நிலையம் வந்து தர்ணாவில் ஈடுபட்ட ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால், அவர்கள் தர்ணாவை கைவிட்டனர். பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.


Next Story