மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம்
சாணார்பட்டி அருகே, மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாணார்பட்டி அருகே உள்ள மாமரத்துப்பட்டியை சேர்ந்தவர்கள் தமிழரசன் (வயது 22), ராஜ்குமார் (25), 16 வயது சிறுவன். இவர்கள் 3 பேரும் சேர்ந்து, சாணார்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளியான 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பாட்டி புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விக்டோரியா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தமிழரசன் மற்றும் சிறுவனை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள ராஜ்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே சிறுமியின் உறவினர்கள், திண்டுக்கல்-நத்தம் சாலையில் ஒத்தக்கடை அருகே மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் அங்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.