தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 950 கன அடி நீர் வெளியேற்றம்
சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து வினாடிக்கு 950 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தண்டராம்பட்டு,
சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து வினாடிக்கு 950 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சாத்தனூர் அணை
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டுஅருகில் உள்ள சாத்தனூர் அணை தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய அணைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த அணையின் உயரம் 119அடி ஆகும்.இதில் 7321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.பாதுகாப்பு நலன் கருதி 117 அடி உயரம் வரை மட்டுமே அணையில் தண்ணீர் தேக்கி வைப்பது வழக்கம்.
அந்த வகையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மற்றும் கிருஷ்ணகிரி அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர் ஆகியவற்றின் காரணமாக அணையில் நீர்வரத்து அதிகரித்து அணையின் முழு கொள்ளளவான 117 அடியை எட்டி உள்ளது. சாத்தனூர் அணையின் பரப்பளவு மூலம் இது 6875 மில்லியன் கன அடியாகும்.
உபரி நீர் வெளியேற்றம்
தொடர்ந்து தற்போது கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணையில் இருந்து உபரி நீர் வெளியேறி வருவதால் சாத்தனூர் அணியின் நீர்வரத்து வினாடிக்கு 950 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது எனவே அணையின் பாதுகாப்பு கருதி 850 கன அடிநீர் 11 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதேபோல் நீர்மின் உற்பத்தி நிலையம் வழியாக 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன்படி அணைக்கு வரும் 950 கன அடி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக தென்பெண்ணையாற்றில் செல்கிறது. விடுமுறை நாளான நேற்று ஆற்றின் கரையோரத்தை ஒட்டிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.