இருதரப்பினர் இடையே தகராறு; 2 பேர் கைது
மானூர் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மானூர்:
மானூர் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
இருதரப்பு தகராறு
மானூர் அருகே மதவக்குறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மூக்கன் மகன் ஆறுமுகம் (வயது 36). நாட்டாண்மையான இவருக்கும், அதே தெருவைச் சேர்ந்த ராஜசேகரன் (52), பெருமாள் (55) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று ராஜசேகரன், பெருமாள் ஆகிய 2 பேரும் ஆறுமுகத்தை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், ராஜசேகரன், பெருமாள் ஆகிய 2 பேர் மீது மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெருமாளை கைது செய்தனர்.
24 பேர் மீது வழக்கு
இந்த நிலையில் ராஜசேகரன் மானூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், ''ஊர் பொது பணம் செலவு செய்த கணக்கை கேட்டதற்காக எனது குடும்பத்தினரையும், பெருமாள் குடும்பத்தினரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகவும், பின்னர் அதிகாரிகள் அறிவுறுத்தலின்பேரில் ஊரில் சேர்த்ததாகவும், புதிய நாட்டாண்மை தேர்வு, ஊர் கணக்கு ஒப்படைக்கும் கூட்டத்துக்கு எங்களது குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்காததால் போலீசாரிடம் தெரிவிக்க இருந்தோம். இந்த நிலையில் எங்களது குடும்பத்தினரை ஊர்காரர்கள் திரண்டு வந்து தாக்கினர். சாணத்தை கரைத்தும் எங்கள் மீது ஊற்றினர்'' என்று தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக வேல்முருகன் என்ற செல்வம், உமா, வென்னிமுருகன், சுப்பிரமணியன் (60), வேலம்மாள், குமார் உள்பட 24 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுப்பிரமணியனை கைது செய்தனர்.