இரு தரப்பினரிடையே தகராறு; 12 பேர் மீது வழக்கு
விழுப்புரத்தில் இரு தரப்பினரிடையே தகராறு; 12 பேர் மீது வழக்கு
விழுப்புரம்
விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்தவர் குமரன் மகன் ஜெகதீசன்(வயது 19). இவர் சாலாமேட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். விழுப்புரம் கே.கே.சாலை அண்ணா நகர் சந்திப்பு அருகில் வந்தபோது அதே பகுதியை சேர்ந்த சங்கர் மகன் சஞ்சய்(22), மூர்த்தி மகன் குமரேசன்(25), செல்லையன் மகன்கள் விஜய்(26), குணால்(24), நடராஜன் மகன் தர்மா(25), காக்காமுட்டை மகன் ராஜி(25), ராஜாகண்ணு மகன் ராஜதுரை(23) மற்றும் 18 வயதுடைய சிறுவன் ஆகியோர் ஒருவரது இறுதி ஊர்வலத்தில் ஆட்டம் ஆடிக்கொண்டபடி வந்தனர். அப்போது ஜெகதீசன், ஹாரன் அடித்தவாறு வழிவிடுமாறு கூறியுள்ளார். அதற்கு சஞ்சய் உள்ளிட்ட 8 பேரும் சேர்ந்து ஜெகதீசனிடம் பிரச்சினை செய்து அவரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஜெகதீசன், விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சஞ்சய் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் சஞ்சய், விழுப்புரம் மேற்கு போலீசில் மற்றொரு புகார் செய்தார். அதில் தன்னை, குமரன் (49), ஜெகதீசன், ராஜதுரை மகன் சிலம்பரசன் (33), பரந்தாமன் மகன் மோகன் (32) ஆகியோர் தாக்கியதாக கூறியிருந்தார். அதன்பேரில் குமரன் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.