கத்தியுடன் புகார் அளித்த நபரால் பரபரப்பு


கத்தியுடன் புகார் அளித்த நபரால் பரபரப்பு
x

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கத்தியுடன் புகார் அளித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

குறைதீர்வு முகாம்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு முகாம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் புகார் மனுக்களை அளித்தனர். பெறப்பட்ட பல மனுக்களை அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து அதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

சாவில் சந்தேகம்

காட்பாடி ஏரிமுனை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சக்கரபாணி, அவரது மனைவி கோவிந்தம்மாள் ஆகியோர் தங்களது பேரக்குழந்தைகளுடன் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்களது மூத்த மகன் ரஞ்சித்குமார் கடந்த மே மாதம் 14-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் அங்குள்ள ஏரியில் மூழ்கி இறந்து விட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். அவரது உடல் 15-ந் தேதி மீட்கப்பட்டது. இந்த நிலையில் இறப்பதற்கு முன்பு எனது மகன் அவரது நண்பர் ஒருவரிடம் செல்போனில் திட்டியபடி பேசிக் கொண்டு இருந்தார். அதன்பின்பு தான் அவர் ஏரியில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.

இந்தநிலையில் அவரது மனைவியும் துக்கம் தாளாமல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்போது மகனுடைய 2 குழந்தைகள் பெற்றோரின்றி தவித்து வருகின்றனர். எனவே எனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக காட்பாடி போலீசில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது மகனின் சாவு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

கத்தியுடன் புகார்

காட்பாடியை அடுத்த குப்பிரெட்டி தாங்கல் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட கத்தி ஒன்றை கொண்டு வந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முன்பு மேசையில் வைத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரிடம் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், நான் வசிக்கும் பகுதியில் கால்நடைகளை கட்டி பராமரித்து வந்தேன். சம்பவத்தன்று எனது மகன் மணிகண்டன் ஆடு, மாடுகளை பராமரிக்கும் போது அந்த பகுதியை சேர்ந்த நபர் அங்கு வந்து கால்நடைகளை கட்டக்கூடாது என்று கூறி, தகாத வார்த்தைகளால் பேசி எனது மகனின் காலில் கத்தியால் வெட்டினார். இதுகுறித்து மேல்பாடி போலீசில் புகார் செய்தேன். அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

ஆறுமுகத்தின் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். கத்தியுடன் மனு அளித்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் அவர் கூறுகையில், எனது மகனை வெட்டிய கத்தியில் அந்த நபரின் கைரேகை பதிவாகி உள்ளது. எனவே அதை கைப்பற்றி இங்கு கொண்டு வந்தேன் என்று தெரிவித்தார்.

ஆட்டோவுக்கு அபராதம்

வேலூர் காகிதப்பட்டறையை சேர்ந்த தயாளன் (வயது 40) அளித்துள்ள மனுவில், நான் வேலூரில் ஆட்டோ ஓட்டி வருகிறேன். நேற்று முன்தினம் பகல் முழுவதும் ஆட்டோ ஓட்டிவிட்டு இரவு சாப்பிட்டுவிட்டு படுக்கைக்கு சென்றேன். அப்போது எனது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் எனது ஆட்டோ கிருஷ்ணகிரியில் போக்குவரத்து விதியை மீறியதாகவும், அதற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். வீட்டில் நிறுத்தியிருந்த ஆட்டோக்கு எப்படி அபராதம் விதிக்க முடியும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிப்பிட்டிருந்தார். பின்னர் போலீஸ் அதிகாரிகள் இதுதொடர்பாக கிருஷ்ணகிரியில் புகார் அளிக்கும்படி தெரிவித்தனர்.


Next Story