பணிகள் முடிந்தும் திறக்கப்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
வாய்மேடு அருகே பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாய்மேடு:
வாய்மேடு அருகே பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்
வாய்மேட்டை அடுத்த தகட்டூர் சமத்துவபுரம் பகுதியில் ரூ.7 லட்சத்தில் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாமல் மூடிய நிலையிலேயே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. தற்சமயம் தகட்டூர் பகுதியில் 3 நாட்களுக்கு ஒரு முறை தான் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பொது மக்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் குடிநீர் சரிவர அப்பகுதி மக்களுக்கு கிடைப்பதில்லை. தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்து வருவதால் பொதுமக்களுக்கு தண்ணீர் குறைவாகவே வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பெரிய அளவிலான கிணற்றிலிருந்து தண்ணீரை சுத்திகரிக்கப்பட்டு அந்த சுத்திகரிக்கப்பட்ட எந்திரத்தின் மூலம் பொது மக்களுக்கு தண்ணீர் வழங்க அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டது.
குடிநீர் சுத்திரகரிப்பு நிலையம்
ஆனால் பணிகள் முடிக்கப்பட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூடியே உள்ளது. இது குறித்து பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் அரசு ஊரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி மேற்கண்ட இடத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.