மோட்டார் சைக்கிளை 'ஸ்டார்ட்' செய்து தாருங்கள்; வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் கலாட்டா செய்த போதை ஆசாமி
மோட்டார் சைக்கிளை ‘ஸ்டார்ட்’ செய்து தாருங்கள் என்று வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் கலாட்டா செய்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.
வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் 40 வயது மதிக்கத்தக்க நபர் மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தார். அப்போது அவர் போலீஸ் நிலைய வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, தள்ளாடியபடி போலீஸ் நிலையத்துக்குள் நுழைய முயன்றார்.
அப்போது அங்கு வெளியே நின்றிருந்த போலீசார், ஏதோ புகார் மனு கொடுக்க வந்திருப்பதாக நினைத்து அந்த நபரை நிறுத்தி விசாரித்தனர். ஆனால் அவர் மதுபோதையில் இருந்தார். சிறிது நேரத்தில் அவர் போதையில் பேச தொடங்கினார். அப்போது அவர், "எனது மோட்டார் சைக்கிள் 'ஸ்டார்ட்' ஆகவில்லை. காவல் துறை உங்கள் நண்பன் என்று சொல்கிறீர்கள். எனக்கு உதவி செய்யுங்கள். எனது மோட்டார் சைக்கிளை 'ஸ்டார்ட்' செய்து தாருங்கள்" என்று கூறி கலாட்டா செய்தார்.
போதையில் இருக்கும் நபரிடம் உரிய முறையில் பேச முடியாது என்பதால், போலீசார் அந்த நபரை, அவர் பாணியிலேயே பேசி அங்கிருந்து அனுப்ப முயற்சித்தனர். இருப்பினும் சிறிது நேரம் போதையில் உளறிய அந்த நபர், சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு மோட்டார் சைக்கிளை 'ஸ்டார்ட்' செய்யாமல் தள்ளிக்கொண்டே அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.