மூதாட்டி மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம்; நகைக்காக கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலம்


மூதாட்டி மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம்; நகைக்காக கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலம்
x
தினத்தந்தி 25 Feb 2023 2:00 AM IST (Updated: 25 Feb 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே நடந்த மூதாட்டி மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. நகைக்காக அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே நடந்த மூதாட்டி மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. நகைக்காக அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மூதாட்டி மர்ம சாவு

திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியபட்டிைய சேர்ந்தவர் திவேஷ்மேரி (வயது 62). இவருக்கு திருமணமாகவில்லை. இதனால் அவர் அப்பகுதியில் தனியாக வசித்து வந்தார். கடந்த 17-ந்தேதி காலை திவேஷ்மேரி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

மேலும் அவரது வீட்டின் மேற்கூரை ஓடுகள் பெயர்த்து எடுக்கப்பட்டிருந்தது. இதனால் மூதாட்டியை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் திண்டுக்கல் தாலுகா போலீசார், மர்மச்சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார். அதன்பேரில் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு உதயகுமார் மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெய்கணேஷ், மலைச்சாமி ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

கழுத்தை நெரித்து கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் திண்டுக்கல்லில், நத்தம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதையடுத்து அவர்களை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ரெண்டலப்பாறையை சேர்ந்த ஸ்டீபன்ராஜா (24), திண்டுக்கல் பொன்னகரத்தை அடுத்த சுபாநகரை சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துராஜா (43) மற்றும் அவரது 17 வயது மகன் என்பதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் 3 பேரும் சேர்ந்து திவேஷ்மேரியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவரது நகையை திருடி சென்றதாக போலீசாரிடம் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். இதனையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2¾ பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

பணம் கொடுக்க மறுப்பு

இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது கைதான ஸ்டீபன்ராஜா, பொக்லைன் எந்திர ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடன் பிரச்சினை இருந்தது. இதனால் திவேஷ்மேரியிடம் அவர் கடன் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் முத்துராஜூவிடம் தனது பிரச்சினைகள் குறித்து ஸ்டீபன்ராஜா கூறினார்.

அப்போது முத்துராஜ் தன்னிடமும் பணம் இல்லை என்று கூறியதுடன், திவேஷ்மேரி வீட்டில் பணம் மற்றும் நகை உள்ளது என்றும், அவர் வீட்டில் கொள்ளையடித்தால் 2 பேரின் கடன்களும் தீர்ந்துவிடும் என்றும் கூறியுள்ளார். அதன்படி, ஸ்டீபன்ராஜ், முத்துராஜ் மற்றும் அவரது 17 வயது மகன் ஆகிய 3 பேரும் சம்பவத்தன்று நள்ளிரவு திவேஷ்மேரியின் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டின் மேற்கூரை மீது ஏறி ஓடுகளை பிரித்து உள்ளே புகுந்தனர்.

அப்போது வீட்டுக்குள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த திவேஷ்மேரியை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் அவர் அணிந்திருந்த தங்க நகை, மோதிரம், தோடு ஆகியவற்றை பறித்துக்கொண்டு 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றது விசாரணையில் ெதரியவந்தது. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story