போலி 'இன்ஸ்டாகிராம்' கணக்கை தொடங்கி டைரக்டர் பாலா பெயரில் நடிகைகளுக்கு ஆபாச தகவல்
டைரக்டர் பாலா பெயரில் போலி ‘இன்ஸ்டாகிராம்' பக்கம் தொடங்கி நடிகைகளுக்கு ஆபாச தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
'சேது', 'நந்தா', 'பிதாமகன்', 'நான் கடவுள்' உள்பட படங்களை இயக்கியவர் பிரபல டைரக்டர் பாலா. இவர் தனது உதவியாளர் மீனாட்சி சுந்தரம் மூலம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில் டைரக்டர் பாலா கையெழுத்திட்டு உள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது பெயரில் 'எக்ஸ்' பக்கம் மட்டுமே உள்ளது. அதன் மூலமாகவே சமூக வலைத்தளங்களில் தொடர்பில் உள்ளேன். 'இன்ஸ்டாகிராம்', 'பேஸ்புக்' போன்றவை எனது பெயரில் இல்லை. ஆனால் எனது பெயரில் போலியான 'இன்ஸ்டாகிராம்' பக்கம் ஒன்றை தொடங்கி, அதில் பல்வேறு தகவல்கள் வெளியாவதாக எனக்கு தெரிய வந்தது.
நடிகைகளுக்கு நான் ஆபாசமாக தகவல்கள் வெளியிட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். இதுதொடர்பாக உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பெயரில் உள்ள போலியான 'இன்ஸ்டாகிராம்' பக்க கணக்கை முடக்க வேண்டும். இதுபோன்ற சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விசாரிக்க உத்தரவு
இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டு உள்ளார். அதன்பேரில் 'சைபர் கிரைம்' துணை கமிஷனர் கீதாஞ்சலி, உதவி கமிஷனர் கிருத்திகா ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு உடனடியாக விசாரணை நடந்து வருகிறது.