துணி துவைக்கும் எந்திரம் வாங்கி தருவதாக கூறி சலவை தொழிலாளியிடம் பணம் பறித்த போலி அதிகாரி கைது
துணி துவைக்கும் எந்திரம் வாங்கி தருவதாக கூறி சலவை தொழிலாளியிடம் பணம் பறித்த போலி அதிகாரி கைது செய்யப்பட்டார்.
ரூ.ஆயிரம் பறிப்பு
கரூர் மணவாடி பெரியார் நகரை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 45). சலவை தொழிலாளி. இவர், தாந்தோணிமலையில் சொந்தமாக இஸ்திரி கடை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடைக்கு வந்த நபர் ஒருவர் நான் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருவதாகவும், தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் துணி துவைக்கும் எந்திரம் உங்களுக்கு பெற்று தர முடியும் எனவும், அதற்கு ரூ.1,500 தர வேண்டும் என மாணிக்கத்திடம் கூறியுள்ளார். இதனை நம்பிய மாணிக்கம் அந்த நபரிடம் ரூ.ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளார். இதையடுத்து துணி துவைக்கும் எந்திரம் வாங்கி தருவேன் என்று கூறி சென்ற அந்தநபரை வெகுநாட்களாக கடைக்கு வரவில்லை.
போலி அதிகாரி கைது
இதனையடுத்து மாணிக்கம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்று அதிகாரி என்று கூறி ரூ.ஆயிரம் பெற்று சென்ற நபர் குறித்து விசாரித்தார். அப்போது அதிகாரி என கூறி ஏமாற்றி சென்றவர் போலி அதிகாரி என்று மாணிக்கத்திற்கு தெரியவந்தது. இதுகுறித்து மாணிக்கம் தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அதிகாரி என கூறி ரூ.ஆயிரத்தை பறித்து சென்றது திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையை சேர்ந்த மணி (43) என்பது தெரியவந்தது. இதையடுத்து மணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.