கிரிவலம் சென்ற ஆந்திர பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற போலி சாமியார் சிக்கினார்
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆந்திர மாநில பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற போலி சாமியாரை பொதுமக்கள் சுற்றி வளைத்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆந்திர மாநில பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற போலி சாமியாரை பொதுமக்கள் சுற்றி வளைத்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்ணிடம் வழிப்பறி
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி மட்டுமின்றி விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். தற்போது தினமும் பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருப்பதியை சேர்ந்த பெண் ஒருவர் அவரது உறவினர்களுடன் கிரிவலம் மேற்கொண்டார். அப்போது அவர் சோனாநிதி தீர்த்தகுளம் அருகில் சென்றபோது இயற்கை உபாதையை கழிக்க சாலையின் ஓரமாக இருந்த காட்டுப் பகுதிக்குள் சென்று உள்ளார்.
அப்போது சாமியார் போன்று வேடமணிந்த ஒருவர் அவரை கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சம் அடைந்த அந்த பெண் மற்றும் அவரது உறவினர்கள் கூச்சலிட்டனர்.
அப்போது கிரிவலப் பாதையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள், கிரிவலம் சென்றவர்கள் காட்டுப் பகுதியில் இருந்து அலறல் சத்தம் வருவதை அறிந்து அங்கு சென்று போலி சாமியாரிடம் இருந்து அந்த பெண்ணை மீட்டனர். அப்போது அங்கிருந்து அந்த நபர் தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.
போலீசில் ஒப்படைப்பு
பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்து சரமாரியாக கம்பால் தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தி பொதுமக்களிடமிருந்து அவரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
மேலும் அவர் பயன்படுத்திய கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசில் கேட்டபோது, கத்தியுடன் பிடிபட்டவர் திருக்கோவிலூரை சேர்ந்தவர் என்றும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கிரிவலப்பாதையில் சுற்றி வருவதாகவும் தெரிவித்தனர்.
பொதுமக்கள் தாக்கியதில் அந்த நபர் படுகாயம் அடைந்ததால் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.
எனினும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு ஏதும் செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.