கொடைக்கானல் மலைப்பாதையில் விழுந்த மரம்
கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில், தீனிக்கோடு அருகே மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.
கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பண்ணைக்காடு, கே.சி.பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் கீழ்மலை கிராமங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக தாண்டிக்குடி அருகே தீனிக்கோடு, இந்திராநகர், கானல்காடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழையுடன் பலத்த காற்றும் வீசியது. இதனால் மலைக்கிராமங்களில் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
இந்தநிலையில் நேற்று அதிகாலை கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில், தீனிக்கோடு அருகே மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்த தாண்டிக்குடி போலீசார், பொதுமக்களின் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பிறகு வாகன போக்குவரத்து தொடங்கியது. இருப்பினும் மரம் சாய்ந்ததால் கொடைக்கானல்-வத்தலக்குண்டு பிரதான மலைப்பாதையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மரம் சாய்ந்ததால் மின்கம்பிகள் அறுந்தன. இதனால் தீனிக்கோடு, இந்திராநகர் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. அதன்பிறகு மின்வாரிய அதிகாரிகள், மின்கம்பிகளை சீரமைத்தனர்.