பிரபல ரவுடி உள்பட 3 பேர் கைது
தளி அருகே கார் டிரைவர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கர்நாடக பிரபல ரவுடி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை
தளி அருகே கார் டிரைவர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கர்நாடக பிரபல ரவுடி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கார் டிரைவர்
கர்நாடக மாநிலம் தொட்டதோகூர் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 30). கார் டிரைவர். இவருக்கு திருமணமாகி சுஷ்மா (20) என்ற மனைவியும், 2 வயதில் கார்த்தியாயினி என்ற மகளும் உள்ளனர். கடந்த 13-ந் தேதி அந்த பகுதியில் உள்ள மதுக்கடையில் சாந்தகுமார் நண்பர்களுடன் மது குடிக்க சென்றார்.
அப்போது வீர்சந்திரா பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி நேபாள் மஞ்சுநாத் (31) அங்கு வந்தார். அவருக்கும், சாந்தகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சாந்தகுமார் நேபாள் மஞ்சுநாத்தை தாக்கினார். இதனால் அவரை கொன்று விடுவதாக நேபாள் மஞ்சுநாத் மிரட்டி உள்ளார்.
கழுத்தை அறுத்துக்கொலை
இதுகுறித்து சாந்தகுமார் எலக்ட்ரானிக்சிட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து நேபாள் மஞ்சுநாத் நான் உன்னை மன்னித்து விடுகிறேன். புகாரை வாபஸ் பெற்றுக் கொள் என சாந்தகுமாரிடம் கூறினார். அதை நம்பி சாந்தகுமார் புகாரை வாபஸ் பெற்றார்.
இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே ஸ்கூட்டரில் சென்ற சாந்தகுமார் மீண்டும் வீடு திரும்பவில்லை. 25-ந் தேதி காலை கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே எலேசந்திரம் கிராமத்தில் ஏரிக்கரையில் சாந்தகுமார் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
3 பேர் கைது
இதுகுறித்து தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ரவுடி நேபாள் மஞ்சுநாத் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சாந்தகுமாரை காரில் கடத்தி வந்து கொலை செய்து உடலை ஏரிக்கரையில் வீசி சென்றது தெரிய வந்தது.
இந்த நிலையில் பெங்களூரு பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி நேபாள் மஞ்சுநாத், அவரது கூட்டாளிகள் பெங்களூரு மங்கம்மாபாளையத்தைச் சேர்ந்த சதீஷ் (22), பன்னார்கட்டா சுனில்குமார் (19) ஆகிய 3 பேரையும் தளி போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான ரவுடி நேபாள் மஞ்சுநாத் மற்றும் அவரது கூட்டாளிகள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ரவுடி நேபாள் மஞ்சுநாத் போலீசாரிடம் கூறியதாவது:-
தாக்கினார்
கடந்த 13-ந் தேதி கர்நாடக மதுக்கடையில் நான் மது குடித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு எனக்கும், சாந்தகுமாருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சாந்தகுமார் என்னை தாக்கினார். இதனால் நான் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தேன். இதன் பிறகு சாந்தகுமார் என் மீது எலக்ட்ரானிக் சிட்டி போலீசில் புகார் செய்தார்.
அந்த புகார் மனுவை வாபஸ் பெறு. நான் உன்னை மன்னித்து விடுகிறேன் என கூறினேன். அதை நம்பி அவரும் புகாரை வாபஸ் பெற்றார். ஆனாலும் அவர் 4 பேர் முன்னிலையில் மதுக்கடையில் வைத்து என்னை அடித்ததால் சாந்தகுமாரை கொலை செய்ய திட்டமிட்டேன்.
வரவழைத்து கொன்றேன்
அதன்படி நான் அவரை ஓசூர் அருகே பேளகொண்டப்பள்ளிக்கு வருமாறு கூறினேன். அதை நம்பி சாந்தகுமாரும் ஸ்கூட்டரில் அங்கு வந்தார். அப்போது நானும், எனது கூட்டாளிகளும் காரில் தயாராக இருந்தோம். அங்கு இருந்து சாந்தகுமாரை காரில் கடத்தினோம். பின்னர் அவரை பின்னமங்கலம்- கும்ளாபுரம் சாலையில் வெட்டிக்கொலை செய்து விட்டு உடலை ஏரிக்கரை சாலையில் போட்டு விட்டு தப்பி சென்றோம்.
ரவுடியான என் மீது ஊரில் உள்ள பொதுமக்களுக்கு பயம் இருந்த நிலையில், சாந்தகுமார் என்னை அடித்ததால் எனக்கு அவமானம் ஆகி விட்டது. அதனால் ஆத்திரத்தில் நான் எனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சாந்தகுமாரை கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.