பண்ருட்டி அருகே, மின்மாற்றி பழுது:தண்ணீரின்றி கருகும் கரும்புகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்த விவசாயி
பண்ருட்டி அருகே, மின்மாற்றி பழுதால் தண்ணீரின்றி கருகும் கரும்புகளுடன் வந்து கலெக்டரிடம் கண்ணீர் மல்க விவசாயி மனு அளித்தார்.
பண்ருட்டி அருகே பணப்பாக்கத்தில் இருந்து கனிசப்பாக்கம் செல்லும் வழியில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி மூலம் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மின் மோட்டாரை பயன்படுத்தி 20 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது அவர்கள் ஆலை கரும்புகளை பயிரிட்டு உள்ளனர். இந்நிலையில் அந்த மின்மாற்றி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெடித்து விட்டது. ஆனால் அதை இது வரை மின்துறை அதிகாரிகள் சீரமைத்து கொடுக்க முன்வரவில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த கரும்பு பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளைகளுக்கு மட்டும் வேறு மின்மாற்றியில் இருந்து மாற்றி மின்சாரம் வழங்கி வருகின்றனர். இது பற்றி மின்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை.
கண்ணீருடன் மனு
இதனால் பாதிக்கப்பட்ட பணப்பாக்ககம் விவசாயி ஷேசாயி என்பவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தன்னுடைய வயலில் காய்ந்த கரும்புகளை மோட்டார் சைக்கிளில் எடுத்துக்கொண்டு வந்தார். பின்னர் அவர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.
அந்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள மின்மாற்றி வெடித்து பழுதாகி 2 மாதங்கள் ஆகியும் இது வரை எங்களுக்கு மின்சாரம் வழங்கவில்லை. இதனால் கரும்பு பயிர்கள் அனைத்தும் கருகி வீணாகி விட்டது.
நடவடிக்கை
இது பற்றி சென்னை மின்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தால், அவர்களிடம் கடலூர் அதிகாரிகள் எங்களுக்கு மின்மாற்றி பழுது பற்றி எந்த புகாரும் வரவில்லை என்று பொய்யான தகவலை கூறுகின்றனர். ஆகவே எங்களுக்கு மின்மாற்றியை சீரமைத்து தண்ணீர் தந்தால் தான் பயிர் வளரும். இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றார். மனுவை பெற்ற அவர், வேளாண்மை துறை, மின்துறை அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பயிருக்கு இழப்பீடு வழங்கவும் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர் சோகத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.