பாப்பாரப்பட்டி அருகே வரப்பில் நடந்த விவசாயி கிணற்றில் தவறிவிழுந்து பலி
கத்தரி செடிக்கு பூச்சி மருந்து தெளித்து விட்டு வரப்பில் நடந்து வந்த விவசாயி கிணற்றில் தவறிவிழுந்து பலியானார்.
பாப்பாரப்பட்டி:
விவசாயி
பாப்பாரப்பட்டி அருகே உள்ள திப்பட்டி பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 67), விவசாயி. இவர் நல்லனூர் அருகே தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். இவரது தோட்டத்தில் கத்தரி செடி சாகுபடி செய்திருந்தார்.
சம்பவத்தன்று விவசாயி சின்னராஜ் தனது தோட்டத்தல் கத்தரி செடிக்கு பூச்சி மருந்து தெளித்துள்ளார். பின்னர் கிணற்றின் ஓரம் உள்ள வரப்பில் நடந்து சென்ற போது, கால் தவறி கிணற்றில் விழுந்து விட்டார்.
இதைப்பார்த்த அவருடைய மகன் மாரிமுத்து, கிணற்றில் மூழ்கிய தந்தையை தேடி பார்த்தார். தந்தையை கண்டுபிடிக்க முடியாததால் பென்னாகரம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.
உடல் மீட்பு
இது பற்றிய தகவல் கிடைத்ததும், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கிணற்றில் மூழ்கிய விவசாயி சின்னராஜை பாதாள சங்கிலி போட்டு தேடினர். இரவு நீண்ட நேரத்திற்கு பிறகு தீயணைப்பு படையினர் சின்னராஜின் உடலை மீட்டனர்.
இதையடுத்து பாப்பாரப்பட்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.