இறந்ததாக நினைத்த விவசாயி உயிர் பிழைத்த அதிசயம்
காரையூர் அருகே இறந்ததாக நினைத்த விவசாயி உயிர் பிழைத்த அதிசய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விவசாயி
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே ஆலம்பட்டி ஊராட்சி முரண்டாம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). விவசாயி. இவர் கடந்த 19 நாட்களாக பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பு சம்பந்தமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை திடீரென சண்முகம் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி ஆம்புலன்சில் முரண்டாம்பட்டிக்கு அனுப்பியுள்ளனர். முரண்டாம்பட்டி அருகே வந்த போது சண்முகம் மயங்கிய நிலையில் இருந்தார்.
சடங்குகள் செய்தனர்
இதைப்பார்த்த உறவினர்கள் சண்முகம் இறந்து விட்டதாக கருதினர். பின்னர் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்று கூடினர். ஆலம்பட்டி விளக்கு மற்றும் முரண்டாம்பட்டி விளக்கு உள்பட 3 இடங்களில் மருத்துவமனையில் இருந்து இறந்தவர்கள் உடலை கொண்டுவந்தால் சாலையின் குறுக்கே வைக்கோல் மற்றும் பல்வேறு பொருட்களை போட்டு எரித்து சடங்குகள் செய்வது வழக்கம். அதேபோல் சண்முகத்திற்கு செய்தனர். பின்னர் முரண்டாம்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வந்து உடலை வைத்துள்ளனர்.
இறந்தவர் உயிர் பிழைத்த அதிசயம்
அவரது மகன் சுப்பிரமணியன் அய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டு இருந்தார். இந்நிலையில், மாலையினை கழட்டி வைத்துவிட்டு அவரது தந்தை சண்முகத்துக்கு பால் ஊற்றியுள்ளார். சிறிது நேரத்தில் திடீரென சண்முகம் எழுந்துள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இறந்ததாக கருதப்பட்ட விவசாயி உயிர் பிழைத்த சம்பவம் அப்பகுதியில் அதிசயமாக பேசப்பட்டது.