உழவர் சந்தை அமைக்க வேண்டும்
நாயுடுமங்கலத்தில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
திருவண்ணாமலை ஒன்றிய அலுவலகத்தில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். இதில் வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டும். நாயுடுமங்கலத்தில் உழவர் சந்தை அமைக்க வேண்டும்.
மழைகாலம் தொடங்குவதற்கு முன்பு ஏரி கால்வாய்கள் அனைத்தும் தூர்வார வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் விரைந்து கடனுதவி வழங்க வேண்டும்.
கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்த அனைத்து விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரண உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
உரங்கள் தட்டுபாடின்றி வழங்க நடவடிக்கை வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.