இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த தந்தை-மகன்
இலங்கையில் இருந்து தனுஷ்கோடி கடற்கரைக்கு 2 அகதிகள் வந்து இறங்கினர். அதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார்.
ராமேசுவரம்,
இலங்கையில் இருந்து தனுஷ்கோடி கடற்கரைக்கு 2 அகதிகள் வந்து இறங்கினர். அதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார்.
2 அகதிகள் வருகை
ராமேசுவரம் நகர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு இலங்கையில் இருந்து வந்ததாக அகதி ஒருவர் சரண் அடைந்தார். தொடர்ந்து அவரிடம் கியூபிரிவு மற்றும் தனிப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் இலங்கை மன்னார் மாவட்டம் தோட்டவேலி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 57), இவரது மகன் சிந்துஜன்(25) என தெரியவந்தது. இவர்கள் இருவரும் கடந்த 18-ந்தேதி தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கியதாகவும், அதன் பின்னர் அங்கிருந்து ராமேசுவரம் வந்து பஸ் மூலமாக நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அகதிகள் முகாமில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
மண்டபம் முகாம் சென்று அகதிகளாக பதிவு செய்ய வேண்டும் என உறவினர்கள் தெரிவித்ததை தொடர்ந்து இருவரும் மண்டபம் அகதிகள் முகாமுக்கு புறப்பட்டு உள்ளனர். இதில் சிந்துஜன் மீது இலங்கையில் திருட்டு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளதால் ராமேசுவரம் வந்தால் போலீசார் கைது செய்து விடுவார்கள் என பயந்து மதுரையிலேயே இறங்கி சென்று விட்டதாகவும், தான் மட்டும் இங்கு வந்ததாகவும் செல்வராஜ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
தீவிர விசாரணை
கியூபிரிவு போலீசாரின் விசாரணைக்கு பின்னர் செல்வராஜ் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தப்பி ஓடிய சிந்துஜன் இலங்கையில் இருந்து தங்கக் கட்டிகள் உள்ளிட்ட வேறு ஏதேனும் பொருட்களை கடத்தி கொண்டு வந்தாரா? என்ற பல்வேறு கோணத்திலும் போலீசார் செல்வராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.